தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திணறல் !

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் செலவுக்கு அதிக பணம் செலவாகும் நிலையில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போதிய பணம் இல்லாமல் திணறி வருகின்றனர். இதனால் ஆளும், எதிர்கட்சிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், திருச்சுழியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜபாளையம், சிவகாசியில் தி.மு.க., கூட்டணியில் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிடுகின்றனர்.

விருதுநகரில் தி.மு.க., கூட்டணியில்தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன், ஸ்ரீவில்லிப்புத்துாரில் இந்திய கம்யூ., வேட்பாளர் மகாலிங்கம், சாத்துாரில் தி.மு.க., வேட்பாளர் கடற்கரை ராஜ் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க., சார்பில் விருதுநகரில் கணேசன், திருச்சுழியில் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், சிவகாசியில் மாஜி., அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிப்புத்துாரில் சந்திரபிரபா, அருப்புக்கோட்டையில் சேதுபதி போட்டியிடுகின்றனர்.

மேலும் சாத்துாரில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ராஜபாளையத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான்பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு தேர்தல் செலவுகளுக்கான நிதியை எப்படி பெற வேண்டும், யார் மூலம் எப்படி செலவழிக்க வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நன்றாக தெரியும். ஆனால் கூட்டணி கட்சிகளில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க., இந்திய கம்யூ., வேட்பாளர்கள் தி.மு.க., நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை கவனித்து விட்டனர். ஆனால் கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தற்போது வரை கூட்டணி கட்சி நிர்வாகிகளை கவனிக்கவில்லை.

இதனால் கூட்டணி நிர்வாகிகள் பலர் தேர்தல் பணியை செய்யாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன பிரசாரம், நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் ஒவ்வொரு வார்டுகளாக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பணி, பிரசாரம், அதற்காக ஆட்களை அழைத்து வருவது போன்ற பலவற்றிற்கு கூட்டணி வேட்பாளர்களிடம் போதிய பணம் இல்லை.

இந்த தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல் செலவுகளை பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட கட்சி நிதியை மட்டும் வைத்து அவசியமாக வேண்டியவற்றிற்கும், வாக்காளர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதும் என தி.மு.க., நிர்வாகிகள் நினைக்கின்றனர்.

இவற்றிற்கு மட்டும் கொடுத்து மற்ற செலவுகளுக்கு கொடுக்காமல் இருந்தால் தேர்தலில் வெற்றி சிரமமாகி விடும் என்பதால் கூட்டணி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement