கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள்; பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு, நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் என்ன வாக்குறுதி கொடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய வாக்களார்கள் காத்திருக்கின்றனர். ஆனால், வேட்பாளர்கள் கோவை நகரரை ஒட்டியுள்ள பகுதிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் தாமோதரன், தி.மு.க., சார்பில் சபரி கார்த்திகேயன், த.வெ.க., சார்பில் விக்னேஷ், நா.த.க., சார்பில் பானுபிரியா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த சட்டசபை தொகுதியில், மொத்தம், 3,00,486 வாக்காளர்கள் உள்ளனர். இதில், கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகள் மட்டுமே இத்தொகுதியில் உள்ளன. கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட இப்பகுதியில் 35 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
இப்பகுதியில், குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தாலுகா அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இல்லை. இதனால் மக்கள் பலர் கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு சென்று வரும் நிலை உள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்கு இப்பகுதிக்கு வரும் வேட்பாளர்களிடம், இப்பிரச்னைகளை தெரிவித்து, வெற்றி பெற்றால் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உத்தரவாதம் பெற, மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இப்பகுதியில் வாக்காளர்கள் குறைவாக இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் யாரும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அதிக வாக்காளர்கள் உள்ள மதுக்கரை தாலுகா, குறிச்சி, போத்தனுார் பகுதிகளில் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், கிணத்துக்கடவு பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவு தாலுகாவாக அறிவிக்கப்பட்டு, 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இரு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் இப்போது வரை இங்கு தாலுகா அலுவலகத்துக்கு கட்டடம் கட்டவில்லை. கட்டப்பட்ட கட்டடமும் நீதிமன்ற வழக்கு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நெருக்கடியான இடத்தில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது.
குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அலைமோதும் நிலை உள்ளது. ஊராட்சியில் உள்ள சில கிராமங்களில் குடிநீர் வினியோகமே இல்லை. இது மட்டுமின்றி பல அரசு அலுவலகங்கள் கிணத்துக்கடவுக்கு கொண்டுவர வாய்ப்பு இருந்தும், இதை செய்ய எந்தக் கட்சியும் முன்வரவில்லை.
இம்முறை மக்களுக்கு குடிநீர் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் கொண்டு வருவோம் என, கூறும் வேட்பாளருக்கு ஓட்டளிக்க உள்ளோம். பிரசாரத்துக்கு வரும் போது, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உத்தரவாதம் பெற திட்டமிட்டுள்ளோம். ஆனால், வேட்பாளர்கள் அதிக வாக்காளர்கள் இருக்கும் நகரப்பகுதியை நோக்கியே செல்கின்றனர்.
இவ்வாறு, கூறினர்.
அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது, மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு பகுதியாக பிரசாரம் செய்கிறோம். கிணத்துக்கடவு தாலுகாவில் குறைந்த பகுதிகளே இருப்பதால், பிரசாரத்துக்கு இரு நாட்கள் ஒதுக்கினால் போதும். அதற்கேற்ப, பிரசார சுற்றுப்பயணம் அமைக்கப்படும். அப்போது, மக்களின் கருத்துக்களை பெற திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
மேலும்
-
வி.சி., கட்சி தலைவர் திருமாவளன் கள்ளக்குறிச்சியில் = பிரசாரம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம்... சூடு பிடித்தது!வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் உற்சாகம்
-
திணறும் முன்னணி பவுலர்கள் * விக்கெட் வீழ்த்துவது எப்போது
-
மாநில அரசு விதை பண்ணையில் நெற்கதிரில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
-
தகராறில் தாய் மகன்கள் மீது வழக்கு
-
வில்வித்தை: இந்தியா 'நம்பர்-1'