அணையில் மதகுகள் மாற்றும் பணி: இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்

வால்பாறை: சோலையாறு அணையில் பழுதடைந்த நிலையில் இருந்த மதகுகள் மாற்றும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை, பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். மொத்தம், 160 அடி உயரமுள்ள இந்த அணை, ஆண்டு தோறும் பருவமழை காலத்தில் நிரம்பியதும், மின் உற்பத்தி துவங்கும். அதன்பின், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த அணையின் பல்வேறு இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதோடு, மதகுகளும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டன. இதனையடுத்து, வால்பாறையில் தற்போது மழைப்பொழிவு குறைந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக அணை பராமரிக்கும் பணி நடக்கிறது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சோலையாறு அணையின் மதகுகள் பழுதானதால், அணை நிரம்பியதும் உபரி நீர் வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அணையின் கொள்ளளவு அதிகரிக்கும் போது சில இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு, உள்பகுதியில் விரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, 55 ஆண்டுகளுக்கு பின், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேதமான மூன்று மதகுகளும் மாற்றப்பட்டுள்ளன. அதே போல் அணையில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள விரிசலும் சரி செய்யும் பணி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும்,' என்றனர்.

Advertisement