ஆடிவெள்ளி, தை வெள்ளி சிறப்பு

உடுமலை: தட்சிணாயனம், உத்தராயனம் என்ற இவ்விரு அயனங்களுமே புண்ணிய காலங்கள், தட்சிணாயனத்தின் ஆரம்பம் ஆடி மாதம், உத்தராயணத்தின் ஆரம்பம் தை மாதம். அயன ஆரம்ப காலமாகவுள்ள இவ்விரு மாதங்களும் சிறப்புடையவை.

பொதுவாக வெள்ளிக்கிழமை அம்பாளுக்குரிய சிறந்த நாள். இதோடு அயன ஆரம்பம் என்னும் சிறப்பும் சேருகின்றதால், இவ்விரு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றன.

இம்முறை பற்றியே இவ்விரு மாதங்களிலும் வரும் அமாவாசை, கிருத்திகை நாட்களும் மிகவும் விசேஷமுடையனவாகக் கொள்ளப்படுகின்றன.

தை அமாவாசை, தைக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை ஆகியவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.

அம்பாளுக்குரிய விரத நாள்கள் வெள்ளிக்கிழமை விரதம், நவராத்திரி விரதம் ஆகியனவாகும்.

ஒவ்வொரு ஆடி மாத வெள்ளிக்கிழமையில், விசேஷ அபிஷேகம், அலங்காரம் மஞ்சள் காப்பு, மாக்காப்பு, சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, குங்கும காப்பு அம்மனுக்கு செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறும். கூழ் ஊற்றுதல் விழாவும் சிறப்பாக கோவிலில் நடைபெற்று வருகிறது.

Advertisement