இறுதிக்களத்தில் யார்? யார்?

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், அவர்களது சின்னம் மற்றும் புகைப்படத்துடன் ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை வெளியாகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 134 வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதியானவர்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற இன்று மாலை 3:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில் த.வெ.க. மாற்று வேட்பாளர் சத்யவசந்த் தனது மனுவை ஏற்கனவே வாபஸ் பெற்றுள்ளார். மற்ற தொகுதிகளிலும் தலா ஒரு மாற்று வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

சின்னம் ஒதுக்கீடு



மாலை 3:00 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கும் பணி தொடங்கும். சுயேச்சைகள் கோரியுள்ள மூன்று சின்னங்களில் ஒன்று, அவர்கள் மனுத் தாக்கல் செய்த வரிசைப்படி ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கோரியிருந்தால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.



வண்ணப் புகைப்படம்







இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும், 'படிவம் - 7ஏ' வாயிலாக வேட்பாளரின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இத்தேர்தலில் முதன்முறையாக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வைக்கப்படும் 'பேலட் ஷீட்'டில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெற உள்ளதாகத் தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது வாக்காளர்கள் தங்கள் வேட்பாளரை எளிதில் அடையாளம் காண உதவும்.

மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மொத்தம் 2,822 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்காக 3,383 கட்டுப்பாட்டு கருவிகள், 3,383 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,666 விவிபேட் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை விட 20 சதவீதம் கூடுதலாகும்.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'நோட்டா' உட்பட 16 பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். வேட்பாளர்களின் எண்ணிக்கை 15-க்கும் மேற்பட்டால், இரண்டாவது இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

அவிநாசி (14 பேர்), மடத்துக்குளம் (13), தாராபுரம் (10) ஆகிய தொகுதிகளில் ஒரு இயந்திரமே போதுமானது.

திருப்பூர் வடக்கு மற்றும் காங்கயத்தில் தலா 17 பேர், பல்லடத்தில் 19 பேர், உடுமலையில் 16 பேர் மற்றும் திருப்பூர் தெற்கில் அதிகபட்சமாக 28 வேட்பாளர்கள் உள்ளனர்.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெறாவிட்டால், திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் போன்ற தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படலாம். தேர்தல் பிரிவினர் கூறுகையில், மாவட்டத்தில் போதிய இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் இயந்திரங்களைப் பெறவும் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது, எனத் தெரிவித்தனர்.

Advertisement