மாவட்டத்தில் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம் ஓட்டுச்சாவடிகளில் 2790 கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
தேனி, தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா இரண்டு வீதம் 2790 வெப் கேமராக்கள் பொருத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரங்கள் ஒருபுறம் மும்முரமாக நடந்து வருகிறது. மற்றொரு புறம் ஓட்டுப்பதிவிற்காக பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன. மாவட்டத்தில் 1394 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. வாக்காளர்பட்டியில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு பெரியகுளம் தொகுதியில் பாகம் எண் 250ல் ஊஞ்சாம்பட்டி ஜெயம்நகரில் 1290 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதனால் இந்த ஓட்டுச்சாவடிக்கு மட்டும் துணை ஓட்டுச்சாவடி அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
2790 கேமராக்கள் பொருத்தம் இந்த தேர்தலில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் உட்புறம் ஒரு கேமரா, வாக்காளர்கள் வரிசையில் நிற்பதை கண்காணிக்கும் வகையில் ஒரு கேமரா என ஒரு ஓட்டுச்சாவடிக்கு இரு ‛வெப் கேமராக்கள்' பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1395 ஓட்டுச்சாவடிகளில் 2790 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக ஓட்டுச்சாவடிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏப்.,15க்கு மேல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
வாகனங்களில் ஜி.பி.எஸ்.,கருவி தாலுகா அலுவலகங்களில் இருந்து ஓட்டுச்சாவடிகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் ஏப்.,22ல் கொண்டு செல்லப்பட உள்ளன. இதற்காக மண்டலத்திற்கு ஒரு வாகனங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சரக்கு வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தி கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்று இரவு ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படும். மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தொகுதி, பாகம் வாரியாக வரிசை படுத்தி வைக்க கட்டங்கள் வரையும் பணி துவங்கி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் தட்டிகள் அமைப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறையினர் துவங்கி உள்ளனர்.