பாக்கு தோப்பில் முகாமிட்ட பாகுபலி யானை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபாலி என்ற ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்த யானை பெரும்பாலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஊட்டி சாலையில் உலா வருவதும், அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் சென்று சேதம் செய்வதுமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு அருகே தனியாருக்கு சொந்தமான பாக்குத்தோப்பில் புகுந்த பாகுபலியால், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர்.

விவசாயிகள் விரட்டியும் பாகுபலி செல்லாமல் அங்கேயே முகாமிட்டு நின்றது.

இதுகுறித்து, உடனடியாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் பாகுபலி யானையை மீண்டும் வனத்திற்குள் திருப்பி அனுப்பினர். -----

Advertisement