ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி


புதுடில்லி: ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு, இஸ்ரோ குழுவினரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.


மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஏர்டிராப் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய, இஸ்ரோ குழுவினரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
இந்த ஏர் டிராப் சோதனை வெற்றி ககன்யான் திட்டத்தின் தயார் நிலையை உறுதிப்படுத்தும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.




இது குறித்து ஜிதேந்திர சிங் கூறியதாவது: அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக இஸ்ரோ குழுவிற்கு பாராட்டுகள்.

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ககன்யான் திட்டத்திற்கான தயார்நிலையை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இது அமைகிறது. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

ஏர்டிராப் சோதனை என்பது என்ன?




ஏர்டிராப் சோதனை என்பது பொதுவாக விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான சோதனை முறையாகும். இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.


விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் விண்கலம், விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது பாதுகாப்பாகத் தரையிறங்குவதை உறுதி செய்வதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.

Advertisement