ஏப்., இறுதியில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை: ஊழியர்கள் வலியுறுத்தல்

சென்னை:'ஊழியர் பற்றாக்குறை மற்றும் வெயில் தாக்கத்தை கருத்தில் வைத்து, ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து, அங்கன்வாடி மையங்களுக்கு, விடுமுறை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அங்கன்வாடி ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊழியர்கள் கூறியதாவது:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ், தமிழகம் முழுதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பராமரித்து, அவர்களுக்கு அடிப்படைக் கல்வி கற்றுத் தருவது, இம்மையங்களின் பிரதானப் பணி. இதற்காக, தலா ஒவ்வொரு மையத்திற்கும், ஒரு ஆசிரியர், ஒரு சமையலர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள, 54,439 மையங்களில் பணியாற்ற, 1.04 லட்சம் ஊழியர் தேவை. ஆனால், தற்போது, 75,000 பேர் பணியில் உள்ளனர். இதனால், பல மையங்கள் ஆசிரியர் இல்லாமல் செயல்படுகின்றன.

சில இடங்களில், ஒரே ஊழியர் கூடுதல் மையங்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப அஞ்சுகின்றனர். எனவே, ஊழியர் பற்றாக்குறை, வெயிலின் தாக்கம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி, இம்மாதத்தின் கடைசி வாரம் முதல், ஒரு மாதம் அங்கன்வாடி மையங்களுக்கு, அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.



***

Advertisement