புறவழி சாலைக்காக முடக்கப்பட்ட நிலங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு

அன்னுார்;கோவை-சத்தி புறவழிச் சாலைக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முடக்கப்பட்ட 786 ஏக்கர் நிலம் தற்போது விடுவிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் புதிய புறவழிச் சாலை அமைக்க ஆணையம் திட்டமிட்டது. இதற்காக மூன்று முறை விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இறுதியாக கடந்த 2022ம் ஆண்டு இறுதி அறிக்கை முடிவு செய்யப்பட்டது. இதற்காக சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக எல்லை வரை ஏற்கனவே உள்ள சாலைக்கு இணையாக 2 கி.மீ., தள்ளி செல்லும்படி புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மொத்தம் 786 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 12 வருவாய் கிராமங்கள், திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு, ஈரோடு மாவட்டத்தில் 16 வருவாய் கிராமங்கள் என 30 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்த 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தை யாரும் வாங்கவோ விற்கவோ அடமானம் செய்யவோ முடியாதபடி 2022 பிப்ரவரியில் முடக்கப்பட்டது.

அன்னுார் சார் பதிவாளர் அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி, சத்தி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த நிலத்தின் உரிமையாளர்கள் நிலத்தை விற்கவும் அடமானம் செய்யவும் முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தற்போது நிலம் முடக்கப்பட்டதற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில், 'கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரியில் தரப்பட்ட 3ஏ நோட்டீஸ் ஓர் ஆண்டு ஆனதால் காலாவதியானது. மீண்டும் புதிய நோட்டீஸ் புதுப்பிக்கப்படவில்லை. அந்த நோட்டீஸிற்கு ஓராண்டு மட்டுமே உரிமை உள்ளது. இதனால் முடக்கப்பட்ட நிலத்தை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் நிலத்தை வாங்கவும், விற்கவும் முடிகிறது. அடமானம் செய்யவும் முடிகிறது.

புறவழிச் சாலை அமைக்க நான்காண்டுகளுக்கு முன் நிலத்தை முடக்கி வைத்தாலும், புறவழிச்சாலை அமைக்கும் பணியும் துவங்கவில்லை. முடக்கப்பட்ட நிலமும் விடுவிக்கப்படவில்லை. இதனால் வீட்டில் சுபகாரியங்கள், உயர்கல்வி ஆகியவற்றுக்கு கடன் பெற முடியாமல் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தோம். தற்போது முடக்கம் விடுவிக்கப்பட்டது. மகிழ்ச்சி தருகிறது. இதனால் வங்கிக் கடன் பெற முடியும். விற்க நினைப்போர் விற்க முடியும்,' என்றனர்.

Advertisement