எப்போதும் ஏ.சி.யில் இருக்கிறீர்களா? உடனே எலும்பு பரிசோதனை செய்ங்க!

கோவை:ஏ.சி. அறையில் தூக்கம், ஏ.சி. ஆபீசில் வேலை, ஏ.சி.காரில் பயணம் என்று உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு எலும்புகள் சீக்கிரம் பலவீனமாவதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

எலும்புகள் அடர்த்தி குறைந்து, பலவீனமாக மாறும் நிலை தான் 'ஆஸ்டியோபோரோசிஸ்'. இதில் ஆரம்ப அறிகுறிகள் இருக்காது. எலும்பு முறிவு ஏற்படும் வரை, இந்நோய் இருப்பதை அறிய முடியாது.

எலும்பில் அடிக்கடி வலி ஏற்படுதல், சிறிய காயம் பட்டாலே எலும்பு முறிவது, முதுகு தண்டுவடம், இடுப்பு, மூட்டு, மணிக்கட்டில் வலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 50 வயது தாண்டியவர்களுக்கே இந்த நோய் ஏற்பட்டது. ஆனால், தற்போது இளைஞர்களும் மிக அதிக அளவில் இந்த பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

அரசு மருத்துவமனை எலும்பு, முடநீக்கியல் மற்றும் விபத்து பிரிவு இயக்குனர் வெற்றிவேல் செழியன் இது குறித்து விளக்கினார்.

''இளைஞர்களுக்கு இப்பாதிப்பு அதிகளவில் ஏற்பட மிக முக்கிய காரணம் மாறிவரும் வாழ்வியல் முறை மட்டுமே. இரவு, பகல் மாறி மாறி வேலை செய்வது, ஏசி. ரூமிலேயே அதிக நேரம் இருப்பது ஆகியவற்றால், சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் விட்டமின்-டி இவர்களின் உடலுக்கு கிடைப்பதில்லை.

இத்துடன் துரித உணவு சாப்பிடுவது, கார்பனேட் செய்யப்பட்ட பாட்டில் குளிர்பானம், மது, சிகரெட் பழக்கத்தாலும் எலும்பு தேய்மானம் அடைகிறது. பெண்களுக்கு, மாதவிடாய் நின்ற பிறகு இப்பாதிப்பு ஏற்படலாம். கால்சியம் சத்து நிறைந்த சத்தான உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, எலும்புகளில் வலி இருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம், மீண்டும் எலும்பை வலுவானதாக்க முடியும்'' என்றார்.

Advertisement