என்னை அவதுாறாக பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன்; பழனிசாமி ஆவேசம்
சென்னை;''முதல்வர் ஸ்டாலின் குறித்து நான் அவதுாறாக பேசவில்லை; என்னை அவதுாறாகப் பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில், சேப்பாக்கம்- -திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளில், பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
துணை முதல்வர் உதயநிதி, 'நீட் தேர்வு ரத்து ரகசியம் இருப்பதாக சொன்னார். அதற்கு, 'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தின் கதை பொருந்தும். மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க.,வும், காங்கிரசும் தான் கடந்த 2010ல், மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வை கொண்டு வந்தன.
ஒரு கதை உண்டு. ராஜாவின் காது பெரியதாக இருப்பதை பார்த்த, சிகை அலங்காரம் செய்பவர், அதை அவர் மனைவியிடம் கூற, அந்த பெண், அந்த ரகசியத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்து, அவரது வயிறு வீங்கி விடும். இதனால், ஒரு குழியை வெட்டி ரகசியத்தைச் சொல்லி மூடுகின்றனர்.
அங்கே முளைக்கும் மரத்தில் இருந்து செய்யப்பட்ட மிருதங்கத்தை, ராஜா நடத்தும் விழாவில் இசைத்தபோது, அது, 'ராஜா காது கழுதை காது' என்றது. ஆத்திரத்தில், மிருதங்கத்தை ராஜா போட்டு உடைத்தது, சிதறிய பாகங்கள் எல்லாம், 'ராஜா காது கழுதை காது' என்று கத்தின. 'நீட்' ரகசியத்தை வெளியிட்டால், இந்த கதை போலாகி விடும் என உதயநிதி பயப்படுகிறார்.
கொரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்டபோது, மக்களுக்கு ஸ்டாலின சரியான ஆலோசனை கொடுக்கவில்லை. அப்போது எங்கே காணாமல் போனீர்கள் என நான் கேட்டதற்கு புலம்புகிறார். தவறாக எதுவும் நான் பேசவில்லை. அப்படி பேச வேண்டிய அவசியமும் இல்லை.
ஸ்டாலினும், உதயநிதியும் என்னைப் பற்றி கேவலமாக பேசுகின்றனர். காலுக்குள் இருப்பதாக சொன்னார்கள். சீர்காழியில் பேசிய ஸ்டாலின், 'வீட்டை துடைப்பது போல் பழனிசாமியை துடைத்தெறிய வேண்டும்' என்று கூறிருக்கிறார். அவர்கள் ஒரு வார்த்தை பேசினால், 10 வார்த்தை திருப்பி பேச முடியும். என்னை அவதுாறாக பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன்; தகுந்த பதிலடி உடனுக்குடன் கொடுப்பேன்.
இரண்டு கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.,வை, யாரும் அசைத்து பார்க்க முடியாது. ஜெயலலிதா மறைந்த பின், அ.தி.மு.க.,வை உடைக்க, 'பி டீம்' வைத்து, தி.மு.க., சதித்திட்டம் தீட்டியது; அதை நாங்கள் முறியடித்தோம். அதனால், 'பி டீம்' இப்போது குப்பைக்கு போய் விட்டது. இப்போது, அ.தி.மு.க., புனிதமாகி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
***
மேலும்
-
கனவுகளால் கடலை வென்ற பார்வையற்ற பெண்
-
கள் இறக்கும் எளியவர்கள் பயங்கரவாதிகளா? தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேச கேள்வி
-
அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு
-
தொண்டர்கள் 'அட்ராசிட்டி': 'பளார்' விட்ட திருமா
-
எப்போதும் ஏ.சி.யில் இருக்கிறீர்களா? உடனே எலும்பு பரிசோதனை செய்ங்க!
-
புறவழி சாலைக்காக முடக்கப்பட்ட நிலங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு