' கொடை'நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத துறை அதிகாரிகள்

கொடைக்கானல்:கொடைக்கானல் மெயின் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கபளீ கரம் செய்வது அதிகரித்து வருகிறது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். சுற்றுலாவை நம்பியே ஏராளமான வணிக ரீதியிலான கடைகள் ரோட்டோரம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கொடைக்கானல் பிரகாசபுரம் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை இடத்தை ஆக்கிரமித்து பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தாராளமாக நடந்தேறுகின்றன. நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்தும் ஆக்கிரப்பாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி பணிகளை தொடர்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் கட்டுமான பணி நடந்த போது அப்போதைய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜன் இவ்விடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பதாகை வைத்தார். இருந்தபோதும் ஆளும் கட்சியினரின் ஆதரவுடன் இப்பகுதியில் கட்டுமானத்திற்கு உண்டான முதற்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சரவணன் கூறுகையில்,''பிரகாசபுரம் ரோட்டோரம் 3 இடங்களில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து பணிகள் நடப்பது குறித்து எச்சரிக்கை செய்தும் பணிகள் செய்கின்றனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ், தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதும் ஆக்கிரமிப்பாளர்கள் பணிகளை நிறுத்தாமல் பணிகளை செய்து வருகின்றனர். இது பற்றி உயரதிகார்களிடம் தெரிவிக்கப்படும்'' என்றார்.

Advertisement