லக்னோ அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் வீழ்ந்தது கொல்கட்டா

கொல்கட்டா: ஆயுஷ் படோனி, முகுல் சவுத்ரி அரைசதம் விளாச, லக்னோ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்தில் கொல்கட்டா அணி ஏமாற்றியது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் கொல்கட்டா, லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


ரஹானே நம்பிக்கை: கொல்கட்டா அணிக்கு ஆலன் (9) சோபிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் ரஹானே, ரகுவன்ஷி ஜோடி நம்பிக்கை தந்தது. மணிமாறன் சித்தார்த் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரஹானே, திக்வேஷ் ரதி வீசிய 5வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டினார். அவேஷ் கான் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் ரகுவன்ஷி. இரண்டாவது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த போது திக்வேஷ் ரதி 'சுழலில்' ரஹானே (41) சிக்கினார். சித்தார்த் பந்தில் ரகுவன்ஷி (45) ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் (4) ஏமாற்றினார்.
பின் இணைந்த பாவெல், கிரீன் ஜோடி ஆறுதல் தந்தது. கொல்கட்டா அணி 20 ஓவரில் 181/4 ரன் எடுத்தது. பாவெல் (39), கிரீன் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.



படோனி அரைசதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ் (15), மார்க்ரம் (22) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கேப்டன் ரிஷாப் பன்ட் (10), நிக்கோலஸ் பூரன் (13), அப்துல் சமத் (2) நிலைக்கவில்லை. நவ்தீப் சைனி வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ஆயுஷ் படோனி (54), அனுகுல் ராய் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார்.

முகுல் அபாரம்: சுனில் நரைன் 'சுழலில்' முகமது ஷமி (1) சிக்கினார். அரோரா வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த முகுல் சவுத்ரி, கார்த்திக் தியாகி வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். தொடர்ந்து அசத்திய முகுல், கிரீன் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார்.


கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. அரோரா பந்துவீசினார். முதல் பந்தில் அவேஷ் கான் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய முகுல், அடுத்த இரு பந்துகளை வீணடித்தார். ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்த முகுல், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

லக்னோ அணி 20 ஓவரில் 182/7 ரன் எடுத்து வெற்றி பெற்றது. முகுல் (54), அவேஷ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement