மனைவி மீது 80 வழக்குகள் தொடர்ந்த கணவர் ரூ.5 கோடி ஜீவனாம்சம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு 10 ஆண்டு நீடித்த விவாகரத்து வழக்கு முடித்து வைப்பு

2

புதுடில்லி: மனைவிக்கு எதிராக, 80க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்த கணவருக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

'தம்பதியின் திருமண உறவு மீட்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டதால், விவாகரத்து வழங்குவதே சிறந்தது' என உத்தரவிட்டதுடன், 'மனைவிக்கு மொத்தமாக 5 கோடி ரூபாய் பராமரிப்பு செலவாக வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது. இதன் மூலம், 10 ஆண்டுகளாக தொடர்ந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தம்பதிக்கு 2010ல் திருமணம் நடந்தது. அடுத்தடுத்து இரு மகன்கள் பிறந்தனர். ஆனால், திருமண உறவு வெகு விரைவிலேயே இருவருக்கும் கசந்து போனது.

இதனால், 2016 முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது, மும்பையில் உள்ள லோகண்ட்வாலா என்ற இடத்தில் மாமனாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், இரு மகன்களுடன் மனைவி வசித்து வருகிறார்.

அதிருப்தி தங்களது வாழ்வாதாரத்திற்கு போதிய நிதியை கணவரிடம் இருந்து பெற்று தரக் கோரி, மனைவி தரப்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வக்கீலாக பயிற்சி பெற்று வந்த கணவர், பழிவாங்கும் நோக்கில் மனைவி, அவரது குடும்பத்தினர், மனைவி சார்பில் ஆஜரான வக்கீல் என, வரிசையாக அவர்களுக்கு எதிராக நாடு முழுதும் பல்வேறு நீதிமன்றங்களில் 80க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்தார்.

இதனால், இருவருக்கும் இடையே 10 ஆண்டுகளாக சட்ட மோதல் நீடித்து வந்தது. குடும்ப நல நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் குடும்ப பராமரிப்பு செலவுக்கு பணம் வழங்குமாறு கணவருக்கு உத்தரவிட்டும் அவர் மதிக்காமல் இருந்தார்.

இதனால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்த கணவர், பராமரிப்பு தொகை வழங்குவதை தவிர்க்கும் வகையில், அந்த பதவிகளை ராஜினாமா செய்ததை அறிந்து நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

'மனைவி நன்கு படித்தவர், சம்பாதிக்கும் திறன் கொண்டவர் என்பதற்காக, மனைவி மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு பொறுப்பிலிருந்து ஒரு கணவர் தப்பித்துவிட முடியாது' என, நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

முற்றுப்புள்ளி இதை தொடர்ந்து, அரசியல் சாசனம் வழங்கிய 142வது பிரிவின்படி, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பு:

மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை கணவர் தொடர்ந்து இருப்பது கண்டனத்துக்குரியது. அவை அனைத்தும் மனைவியை துன்புறுத்தவும், பழிவாங்கவும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை வைத்து பார்க்கும் போது, இருவரது திருமண உறவும் மீட்க முடியாத நிலைக்கு சென்று விட்டது உறுதியாகி உள்ளது.

தம்பதியினருக்கு நிம்மதியை வழங்கவும், சட்டப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் விவாகரத்து வழங்குவதே சிறந்தது என கருதுகிறோம். அடுத்த ஓராண்டு காலத்திற்குள் மனைவிக்கு 5 கோடி ரூபாயை கணவர் வழங்க வேண்டும்.

இந்த தொகை கிடைத்த இரு வாரங்களுக்குள், மும்பையில் வசித்து வரும் மாமனார் வீட்டை மனைவி காலி செய்து கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் எதிராக தொடர்ந்துள்ள 80க்கும் மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடர மாட்டேன் என கணவர் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

தாயின் அரவணைப்பிலேயே இரு மகன்களும் வளர வேண்டும். மகன்களை சந்திக்க தந்தைக்கு அனுமதி தரப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisement