திரு.வி.க., நகரை தாரை வார்க்கும் தி.மு.க., கணக்கு தப்பானதாக கட்சியினர் புலம்பல்

கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள புகைச்சல் காரணமாக, திரு.வி.க., நகர் தொகுதியில் தி.மு.க.,வின் வெற்றி தாரை வார்க்கப்படுவதாகவும், கணக்கு தப்பாகி உள்ளதாகவும் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

திரு.வி.க., நகர் தொகுதியில் தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தாயகம் கவி, மேயர் பிரியா ஆகியோர், சீட் கேட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதுமுக வேட்பாளராக வழக்கறிஞர் ரவிச்சந்திரன் என்பவருக்கு சீட் தரப்பட்டது. இது, கட்சிக்குள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியது. அதேநேரம், அ.தி.மு.க., சார்பில் பகுஜன் சமாஜ் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் மனைவி பொற்கொடி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, பொற்கொடி தீவிர பிரசாரத்தை துவக்கினார்.

வழிநெடுக அவருக்கு, தங்கள் வீட்டு பிள்ளை என்ற உரிமையோடு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதேநேரம், தி.மு.க.,வில் கூட்டணி கட்சியினரை மதிக்காமல் பிரசாரம் மேற்கொள்வதாக, திரு.வி.க., நகர் வேட்பாளர் மீது புகார் கிளம்பி உள்ளது.

'கூட்டணி கட்சியினருக்கு பிரசாரம் குறித்த விபரங்களை தெரிவிப்பதில்லை என்றும், கலந்தாலோசிக்காமல் முடிவு எடுப்பதாகவும்' கூட்டணி கட்சி நிர்வாகிகள் குற் றஞ்சாட்டி வருகின்றனர்.

இதற்கு, வி.சி.க., தலைவர் திருமாவளவன் நேரடியாகவே பொற்கொடிக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது காரணம் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன.


கள நிலவரத்தை பார்க்கையில், திரு.வி.க., நகரை பொறுத்தவரை, கூட்டி கழித்து பார்த்தும் தி.மு.க.,வின் கணக்கு தப்பாக மாறியுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


- நமது நிருபர் -

Advertisement