சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறேன் தி.மு.க., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, கடந்த 10 நாட்களாக, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க., அரசு செய்த சாதனைகளை கூறி, உரிமையோடு ஓட்டு கேட்கிறேன். மற்ற கட்சியினரால் இப்படி உரிமையோடு ஓட்டு கேட்க முடியுமா?' என, கேள்வி எழுப்பினார்.

அப்போது கார்த்திக் தண்டபாணி கூறியதாவது:

இன்று, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாலை வசதி, மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்ளதென்றால், அதற்கு காரணம் தி.மு.க., ஆட்சிதான். மருத்துவ துறையில், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கும் தி.மு.க., ஆட்சியே காரணம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பள்ளி மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' என, கடந்த கால தி.மு.க., ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அடுக்கடுக்கான திட்டங்களுக்கு மேல் பூச்சு வேலை செய்தே அ.தி.மு.க., அரசு காலத் தை ஓட்டியது.

மகளிர் சுய உதவிக்குழு என்ற திட்டம், 1989ல், தி.மு.க., ஆட்சியில் தான் துவக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் கடன் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

தவிர, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே தமிழகம் தனித்துவமான மாநிலமாக விளங்குகிறது என்றால், அதற்கு காரணம் தி.மு .க., என்ற இந்த மாபெரும் மக்கள் இயக்கம் தான்.

கடந்த ஐந்தாண்டுகால தி.மு.க., ஆட்சி, தமிழகத்தின் மகத்தான ஆட்சி என, மக்கள் பாராட்டுகின்றனர். தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களால், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்து வருகிறது.

நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, வீடு தேடி மருத்துவம் என, 'திராவிட மாடல்' ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் யாவும், தமிழகத்தின் செப்பேடுகளாக ஜொலிக்கின்றன.

தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை கூறி, நான் ஓட்டு கேட்கிறேன். மற்ற கட்சியினர், போலி வாக்குறுதிகளை கொடுத்து, ஓட்டு சேகரிக்கின்றனர். இதை பொது மக்களும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement