காஞ்சி கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனைக்கு, நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காஞ்சிபுரம் ஹாஸ் பிட்டல் சாலையில், கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகம் இயங்கி வருகிறது.

இந்த வளாகத்தில், கால்நடை பெரு மருத்துவமனை, கால்நடை இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை நோய் புலனாய்வு அலுவலகம், நடமாடும் கால்நடை மருத்துவமனை ஆகிய மருத்துவமனை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இதில், கால்நடை பெரு மருத்துவமனைக்கு, உதவி இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் பிரதம மருத்துவர், கால்நடை முதுநிலை ஆய்வாளர், கால்நடை ஆய்வாளர், ஆறு உதவியாளர்கள் என, ஒன்பது பணியிடங்கள் உள்ளன.

இதில், சிலர் மட்டுமே பணியில் உள்ளனர். உதவி இயக்குநர் அஸ்தஸ்தில் இருக்கும் பிரதம மருத்துவர் இருப்பதில்லை.

இங்கு, ஆடு, மாடுகளுக்கு சினை ஊசி மற்றும் முதலுதவி மட்டுமே அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வரும் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, கால்நடை பெரு மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்த பணியிடத்தை, அத்துறை உயரதிகரிகள் அரசிற்கு பணி ஒப்படைப்பு செய்துவிட்டனர்.

அதற்கு பதிலாக, உதவி இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் பிரதம மருத்துவரே, மருத்துவமனைக்கு வரும் ஆடு, மாடுகளுக்கு மருத்துவம் பார்க்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அவர், நான் உதவி இயக்குநர்; நான் ஏன் வைத்தியம் பார்க்க வேண்டும் என, பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறார்.

அதேபோல, நடமாடும் மருத்துவர், நோய் புலனாய்வு மருத்துவர் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் பொறுப்பை தட்டிக்கழிப்பதால், கால்நடை வளர்ப்போர் நோய் தாக்குதல் ஏற்படும் போது சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

உதாரணமாக, சினை மாடு கன்று போடுவதற்கு சிரமத்தை சந்திக்கும் போது, கால்நடை மருத்து வரின் உதவியுடன் கன்றை வெளியே எடுக்க வேண்டி உள்ளது.

இதுபோன்ற நேரங்களில், கால்நடை மருத்துவர் அவசியம் இருக்க வேண்டும். இந்த பணியை, கால்நடை ஆய்வாளர்கள், பயிற்சி மருத்துவர்களிடம் விட்டுவிடுகின்றனர்.

எனவே, காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனைக்கு நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தினசரி ஒரு மருத்துவர், பணியில் இருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளோம். இனி எந்த பிரச்னையும் வராது' என்றார்.

Advertisement