அதிக வறட்சியால் பெரிய கண்மாயில் தண்ணீர் காலி: நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது

ஆர்.எஸ்.மங்கலம்: வறட்சியால் பெரிய கண்மாய் நீர் காலியாகி வருவதால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் மழைக்காலத்தில் தேங்கி இருந்த தண்ணீர் தற்போது தொடர் வறட்சியால் காலியாகி கண்மாய் வறண்டுள்ளது. பள்ளங்களில் மட்டுமே தற்போது குறைந்த அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், குடியிருப்புகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் 5 முதல் 10 அடி வரை குறைந்துள்ளது.

இதனால் வீடுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கண்மாயில் பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரும் சில வாரங்களுக்கு மட்டுமே இருக்கும்.

இதனால் கால்நடை வளர்ப்போர், கால்நடைகளின் குடிநீருக்கு கோடை காலத்தில் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகளும், மக்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

---

Advertisement