மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அம்பாள் ஊஞ்சல் உற்சவம்
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி அர்ச்சனையும் நடந்தது.
உடுமலையில் நுாற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 24ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் என உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன.
தினமும் அம்மன், காமதேனு, யானை, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். கடந்த, 8ம் தேதி, அம்மன் சூலத்தேவர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நேற்று முன்தினம், சூலத்தேவருடன், மகா சக்தி மாரியம்மன் தம்பதி சமேதரராக, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திருவிழாவில், நேற்று காலை, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், ஸ்ரீ லலிதா திரிசதி அர்ச்சனையும் நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் அம்பாள் பரிவேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், குட்டை திடலில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.