குகேஷ், நிஹால் வெற்றி: மெனோர்கா செஸ் போட்டியில்

மெனோர்கா: மெனோர்கா செஸ் 4வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், நிஹால் சரின் வெற்றி பெற்றனர்.

ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள மெனோர்கா தீவில், சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், நிஹால் சரின், ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட 6 பேர் பங்கேற்கின்றனர்.

நான்காவது சுற்றில் குகேஷ், ஹரிகிருஷ்ணா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 54வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் நிஹால் சரின், ஹங்கேரியின் ரிச்சர்ட் ராபோர்ட் மோதினர். இதில் வெள்றை நிற காய்களுடன் விளையாடிய நிஹால், 34வது நகர்த்தலில் வென்றார்.

பின், குகேஷ் (கருப்பு) - ரிச்சர்ட் ராபோர்ட் (வெள்ளை), நிஹால் சரின் (கருப்பு) - உக்ரைனின் ரஸ்லன் பொனோமரியோவ் (வெள்ளை) மோதிய 5வது சுற்று போட்டிகள் 'டிரா' ஆகின. மற்றொரு 5வது சுற்றில் ஹரிகிருஷ்ணா (வெள்ளை), 38வது நகர்த்தலில் அமெரிக்காவின் லீனியர் டொமிங்குவெஸ் பெரெசை தோற்கடித்தார்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் நிஹால் சரின் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குகேஷ், பொனோமரியோவ், ஹரிகிருஷ்ணா தலா 2.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அடுத்த இரு இடங்களில் ரிச்சர்ட் ராபோர்ட், லீனியர் டொமிங்குவெஸ் பெரெஸ் (தலா 2.0 புள்ளி) உள்ளனர்.

Advertisement