5 தொகுதிகளுக்கு கூடுதல் ஓட்டு மெஷின் ஒதுக்கீடு

கோவை: கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்துார், சிங்காநல்லுார் ஆகிய ஐந்து தொகுதிகளில், 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. கூடுதல் இயந்திரங்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. அவை பாதுகாப்பு கிடங்கில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்டு, தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 183 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு, முதலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர், அதன்பின், பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களின் பெயர், இதன்பின், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் பேலட் ஷீட் அச்சிடப்படும்.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 16 பட்டன் உளளன கடைசி பட்டன் நோட்டாவுக்கு ஒதுக்கப்படும். சூலுாரில் - 15, கவுண்டம்பாளையம் - 14, பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஐந்து தொகுதிகளில் அமையும் ஓட்டுச்சாவடிகளில் ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்புடும்.

மேட்டுப்பாளையம் - 22, கோவை வடக்கு - 28, தொண்டாமுத்துார் - 21, கோவை தெற்கு - 31, சிங்காநல்லுார் - 28 வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். இத்தொகுதிகளில் 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவற்றில் மிக அதிகபட்சமாக கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் ஏற்கனவே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோட் யூனிட்டுகள், விவி பேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டு, அனுப்பப்பட்டு உள்ளன. தற்போது இன்னொரு இயந்திரம் தேவைப்படுவதால், கோவை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணைய மென்பொருள் வாயிலாக, குலுக்கல் முறையில் நேற்று ஒதுக்கப்பட்டன.

அதன்பின், தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய பாதுகாப்பு கிடங்கில் இருந்து தொகுதி வாரியாக இயந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. கோவை வடக்கு - 406, கோவை தெற்கு - 339, சிங்காநல்லுார் - 429, மேட்டுப்பாளையம் - 432, தொண்டாமுத்துார் - 445 இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

வேட்பாளர்களின் பெயர், போட்டோ மற்றும் சின்னத்துடன் கூடிய பேலட் சீட் அச்சடிக்கப்பட்டதும், அந்தந்த தொகுதிக்கு ஒதுக்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும். அதற்கு முன், அவற்றின் செயல்பாடு மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement