ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க பணி விறுவிறுப்பு

கோவை: ஜி.சி.டி. கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

இதற்கான அறைகள் தயார் செய்யும் பொறுப்பு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஓட்டு இயந்திரங்கள் வைக்க'ஸ்ட்ராங் ரூம்' ஏற்படுத்தப்படுகிறது. ஓட்டு எண்ணுவதற்கு மேஜை வசதியுடன், ஏஜன்ட்டுகள் நின்று பார்க்க வசதியாக, சுற்றிலும் கம்பி வேலி போடப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டன. இரும்பு தடுப்புகள் வந்துள்ளன. வகுப்பு நடந்த அறைகளில் ஆசிரியர்கள் நின்று பாடம் எடுக்க அமைத்துள்ள கான்கிரீட் மேடைகள் இடிக்கப்படுகின்றன. ஓட்டு இயந்திரங்கள் வைக்கும் அறைகளின் ஜன்னல்கள், மர தடுப்புகளால் அடைக்கப்படுகிறது.

ஒன்பது தொகுதிகளின் ஓட்டு எண்ண தலா 14 டேபிள், கவுண்டம்பாளையத்தில் சாவடி அதிகம் என்பதால், 20 டேபிள் போட உள்ளனர்.

தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

ஜி.சி.டி. கல்லுாரியில் மாணவ, மாணவியருக்கு இன்னும் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒதுக்கியுள்ள அறைகளில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டு உள்ளன. முதலில், 10 தொகுதிகளுக்கான அறை தயார்படுத்தப்படும். அதன்பின், தேர்தல் பார்வையாளர் அறை, மாவட்ட தேர்தல் அதிகாரி அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். பத்திரிகையாளர்களுக்கு 'டிவி' வசதியுடன் தனி அறை ஒதுக்கப்படும். ஓட்டுப்பதிவுக்கு 3 நாள் முன்னதாக மையம் தயாராகி விடும்.

Advertisement