தேர்தலுக்கு முன்பே தெற்கு தொகுதியில் குடியேற வீடு தேடுகிறார் செந்தில் பாலாஜி

கோவை: கோவையில் போட்டியிடும் தி.மு.க. , அ.தி.மு.க. , நா.த.க. , த.வெ.க. கட்சிகளுடன் தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளையில் நடைபெற்றது.

தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, கோவை எம்.பி. ராஜ் குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் வேட்பாளர் ஜெயராம், எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன், நா.த.க. சார்பில் சிங்காநல்லூர் வேட்பாளர் நேரு, த.வெ.க. சார்பில் கோவை தெற்கு வேட்பாளர் செந்தில் குமார், கோவை வடக்கு வேட்பாளர் சம்பத் குமார் கலந்து கொண்டனர்.

கோவை தொழில் அமைப்பினர் பங்கேற்று, 'வரிச்சுமையை குறைக்க வேண்டும், உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

செந்தில் பாலாஜி பேசுகையில்,''நான் உங்களுக்கு புதியவன் இல்லை. பல ஆண்டுகளாக அரசியலில் பயணிக்கிறேன். ஏற்கனவே கோவையில் வீடு எடுத்து தங்கியுள்ளேன். ஆனாலும் என்னை எங்கே சந்திப்பது என்பதில் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம்.

தெற்கு தொகுதிக்குள் வசிக்க வேண்டும் என்பது என் ஆசை. தீவிரமாக வீடு பார்த்து கொண்டிருக்கிறேன். இன்னும் 2 நாட்களில் குடியேறி விடுவேன். தமிழக உற்பத்தியில் 15 சதவீதம் கோவையில் இருக்கிறது. அதை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்கிற இலக்குடன் பணியாற்றுவேன்,'' என்றார்.

அ.தி.மு.க. ஜெயராம் பேசுகையில்,''கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நாங்கள்தான் செயல்படுத்தினோம்.

அவற்றை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் கோவைக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியும். எங்கள் கூட்டணியின் டபுள் இன்ஜின் சர்கார் வரும்போது கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எங்கள் ஆட்சியில் வரிகளை உயர்த்தவில்லை.

தற்போது வரிச்சுமையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்துறையில் நிறைய இடர்பாடுகள் உள்ளன. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement