டீ கடையில் போண்டா சுட்டு கொடுத்து ஓட்டு வேட்டையாடிய மதியழகன் எம்.எல்.ஏ.,


கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வேலம்பட்டி, சென்றாயம்பட்டி, கம்புகாலப்பட்டி, நாகரசம்பட்டி, பர்கூர் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். என்.தட்டக்கல் பகுதியில் உள்ள ஒரு கடையில் போண்டா சுட்டு கொடுத்து, அனைவரிடமும் ஓட்டு கேட்டார்.
பிரசாரத்தின்போது, பொதுமக்களிடம் வேட்பாளர் மதியழகன் பேசியதாவது:

தமிழகத்தில், எல்லார்க்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடந்து வருகிறது. ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்கள் சென்றுள்ளன. ஓட்டு போடாதவர்களும் தற்போது, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க தயாராகி வருகின்றனர்.

தமிழக அரசின் சிறப்பான திட்டங்களால், நற்பெயர் கிடைப்பதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை நிறுத்தி வைத்து, பணத்தை தர மறுக்கிறது. இருப்பினும் மத்திய அரசிடம் மண்டியிடாமல், அவர்களை எதிர்த்து நம் திட்டங்களை பெற போராடி வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.,வோ அவர்கள் கட்சியையே பா.ஜ.,விடம் அடகு வைத்து விட்டனர்.
திட்டங்களை வாரி வாரி வழங்கியுள்ள நிலையில், அந்த திட்டங்களை முடக்கி, தமிழகத்தில் மத பிரச்னைகளை உருவாக்க, பா.ஜ., நினைக்கிறது. அது தமிழகத்தில் நடக்காது. காலை உணவுத்திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டங்களை நாடே திரும்பி பார்க்கிறது. தற்போது மகளிர் உரிமைத்தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 8,000 ரூபாய் பரிசு கூப்பன் வழங்க உள்ளோம். அதில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். திட்டங்கள் தொடர, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., ஆட்சி தொடர அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement