தாய்ப்பத்திரம் குறித்த முழு விபரம் இல்லாமல் சொத்து வாங்க கூடாது!

அசையா சொத்துக்களை வாங்கும் போது ஆவணங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பொதுவாக ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால் அதை யார் விற்கிறார் என்பதை விசாரிக்க வேண்டும்.

அந்த சொத்தை விற்பதாக கூறும் நபர் அதற்கு சரியான உரிமையாளரா என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் அவரிடம் உள்ள பத்திரங்கள் குறித்தும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதில் பெரும்பாலான மக்கள், விற்பவர் பெயரில் இருக்கும் அசல் பத்திரத்தை பார்த்தால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால், அவருக்கு முன் அந்த சொத்து யார் பெயரில் இருந்தது என்பதற்கான அசல் பத்திரம் தான் தாய்ப்பத்திரம் என்று கூறப்படுகிறது.

இதன்படி, சொத்தின் அசல் தாய்ப்பத்திரம் வாங்கி உண்மை நிலையை சரி பார்க்க வேண்டியது அவசியம். இதில் பெரும்பாலான மக்கள் உரிய கவனம் செலுத்தாமல் விடுகின்றனர் என்பதே நில அபகரிப்பு, மோசடிகளுக்கு வழிவகுக்கிறது.

சில இடங்களில், தற்போது உள்ள உரிமையாளர் பெயரிலான பத்திர விபரங்களை தெரிந்து கொண்டு போலியாக ஒரு ஆவணத்தை தயாரித்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால், தான் சொத்துக்கான முந்தைய பரிமாற்றங்களை உறுதி செய்ய தாய்ப்பத்திரம் கேட்கப்படுகிறது.

இதில், ஒரு தனி நபரிடம் இருக்கும் சொத்தை முழுமையாக ஒருவர் வாங்கும் போது அவருக்கு தாய்ப்பத்திரத்தின் அசல் பிரதி கிடைக்கும். ஆனால், ஒரு நிலம் மனைப்பிரிவுகளாக பிரித்து அல்லது அடுக்குமாடி திட்ட வீடுகளாக அதிக நபர்களுக்கு விற்கப்படும் போது, ஒவ்வொரு பத்திரப்பதிவின் போதும் அசல் தாய்ப்பத்திரம் சரிபார்க்கப்பட வேண்டும்.

ஆனால், கடைசியியாக யார் அத்திட்டத்தில் வீடு, மனை விற்கப்படுகிறதோ அவரிடம் அசல் தாய்ப்பத்திரம் கொடுக்கப்படும். சொத்தின் முந்தைய பரிமாற்றங்களை வில்லங்க சான்று வாயிலாக சரி பார்க்க வாய்ப்பு இருக்கும் நிலையில் அசல் தாய்ப்பத்திரம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

வில்லங்க சான்றிதழில் உள்ள விபரங்கள் சரியானவையா என்பதை உறுதி செய்வதற்கு அசல் பிரதிகள் தேவைப்படுகின்றன. இந்த விஷயத்தை சரியாக மக்கள் புரிந்து கொண்டு, அவசரப்படாமல், தெளிவான நிலையில் செயல்பட வேண்டும்.

தற்போது, சொத்து பரிமாற்றத்தில் பத்திரப்பதிவின் போது அசல் தாய்ப்பத்திர சரி பார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு நபர்கள் வழக்கு தொடர்ந்தாலும், இதில் அடிப்படை விஷயம் எந்த விதத்திலும் தடை செய்யப்படவில்லை என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

சில இடங்களில், தற்போதைய உரிமையாளர் விபரங்களை தெரிந்து கொண்டு போலி ஆவணத்தை தயாரித்து மோசடி செய்கின்றனர், இதனால், தான் சொத்துக்கான முந்தைய பரிமாற்றங்களை உறுதி செய்ய தாய்ப்பத்திரம் கேட்கப்படுகிறது.

Advertisement