ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்

தாராபுரம், தாராபுரம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் மயங்கியதால், சாலையோர தோட்டத்துக்குள் அரசு பஸ் புகுந்தது.திருப்பூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு, ஒரு அரசு பஸ் நேற்று மதியம் புறப்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த வெற்றிவேல், 55, ஓட்டினார். மதியம், 3:20 மணியளவில் குண்டடத்தை அடுத்த இடையன்கிணறு அருகே சென்றபோது, திடீரென வெற்றிவேலுக்கு மயக்கம் ஏற்பட்டது.


இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர தோட்டத்தில் புகுந்து சிறிது துாரம் ஓடி நின்றது. இதனால் பஸ்ஸில் இருந்த, 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்தில் பஸ் முன்புற கண்ணாடி உடைந்து, டயர் பஞ்சரானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement