மீன்பிடி தடையால் மீனவர்களின்றி ராமேஸ்வரம் கடற்கரை 'வெறிச்'
ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் ஏப்., 15 துவங்கியதால் ராமேஸ்வரம் கடலோர பகுதிகளில் மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது.
இத்தடை நேற்று முன்தினம் முதல் துவங்கியதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக முழுவதும் (கன்னியாகுமரி தவிர) 8000 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகுகளில் உள்ள மின் பேட்டரிகள், மீன்பிடி வலைகள், தளவாடப் பொருள்களை பாதுகாக்க டிராக்டர், லாரியில் ஏற்றி மீனவர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். பாம்பனில் சில படகுகளை கடற்கரையில் ஏற்றி பராமரிப்பு பணி செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
கடலோர டீக்கடைகள், ஓட்டல்கள், லேத், பட்டறைகள் மூடப்பட்டு மீனவர்கள் நடமாட்டம் இன்றி உள்ளதால் கடலோரப் பகுதி வெறிச்சோடியது.
திருடர்கள் கைவரிசை மீனவர்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி திருடர்கள், படகுகள் மற்றும் கடற்கரையில் உள்ள மீன்பிடி தளவாட பொருட்களை வைக்கும் கம்பெனிக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் செல்லும் அபாயம் உள்ளது. எனவே கடலோர பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.