தேர்தல் ஊழியர்கள் பணி நியமனம் குளறுபடி அதிகம் என குற்றச்சாட்டு

அன்னுார்: தேர்தல் பணி நியமனத்தில் குளறுபடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர்கள், நிலை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு, முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த வாரம் நடந்தது.

அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

ஓட்டுச்சாவடியில் முதன்மை ஓட்டுச்சாவடி அலுவலருக்கு அடுத்து நிலை ஒன்று அலுவலர் உள்ளார். அவிநாசி தொகுதியில், நிலை ஒன்று அலுவலர்களாக இதுவரை தேர்தல் பணி பார்த்திராத, நடுநிலைப் பள்ளிகளில் துவங்கப்பட்ட எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் பணிபுரிந்து வரும், பள்ளி மேலாண்மை குழுவால் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை ஒன்று மிக முக்கியமானது. இதற்கு ஏற்கனவே தேர்தல் பணி பார்த்திருந்த அனுபவம் உள்ள அரசு ஊழியர் அல்லது ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆனால், மாற்றி நியமித்துள்ளனர்.

அதேபோல், கடந்த முதல் கட்ட பயிற்சி வகுப்பில், பயிற்சி தருவோர் விளக்கமாக பொறுப்பு, கடமைகள், சிக்கல் ஏற்படும் வாய்ப்பு, அதைத் தீர்க்கும் விதம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஆனால், பவர் பாயிண்ட்டில் வீடியோ ஒளிபரப்பி விட்டு அதை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டனர். பயிற்சியாளர்கள், விளக்கமாகத் தெரிவித்தால் மட்டுமே புதிதாக இந்த முறை தேர்தல் பணிக்கு வந்தவர்களுக்கு தேர்தல் பணியை சந்திப்பது எளிதாக இருக்கும்.

வரும் 15ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பிலாவது, செயல்முறை விளக்கம் தெளிவாக வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement