வீடு தேடி சென்று ஓட்டுப்பதிவு செய்யும் பணி  ;தேர்தல் பொது பார்வையாளர் திடீர் ஆய்வு

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வீடுகளுக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்யும் பணியை பொது பார்வையாளர் தினேஷ் ஸ்ரீ வத்சவா, ஆய்வு செய்தார்.

தேர்தல் கமிஷன், 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே ஓட்டுப்பதிவு செய்ய அனுமதியளித்துள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வாயிலாக, வீட்டிலிருந்தே ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து படிவம், 12டி, ஏற்கனவே பெறப்பட்டது.

உடுமலை தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்ட, 735 பேரும், மாற்றுத்திறனாளிகள், 202 பேர் என, 937 வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர்.

இத்தொகுதியில், தலைமை தேர்தல் அலுவலர், நுண்பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என ஏழு பேரை கொண்ட, 27 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ஓட்டுப்பதிவு செய்து வருகின்றனர்.

அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்டோர், 678 பேரும், 234 மாற்றுத்திறனாளிகள் என, 912 பேர் வீட்டிலிருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

வீடு தேடி சென்று ஓட்டுப்பதிவு செய்ய, இத்தொகுதியில், அதிகாரிகளை கொண்ட, 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், வீடுகளுக்கு நேரடியாக சென்று ஓட்டுப்பதிவு செய்யும் பணி, கடந்த, 12ம் தேதி துவங்கி, இன்று வரை நடக்கிறது.

இப்பணியை, இந்திய தேர்தல் கமிஷன் சார்பில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, தினேஷ் ஸ்ரீ வத்சவா, மடத்துக்குளம் தொகுதி பாப்பான்குளம் கிராமத்தில் நடந்த ஓட்டுப்பதிவு பணியை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதே போல், உடுமை, மடத்துக்குளம் தொகுதியில் பல்வேறு குழுக்கள் மேற்கொண்டிந்த பணியை ஆய்வு செய்தார்.

Advertisement