தலைமையிடமாக பெருமாநல்லுார் புதிய தாலுகா உருவாக்கப்படும்: அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் வாக்குறுதி

திருப்பூர்:''மக்கள் தொகை அதிகரித்து உள்ளதால், பெருமாநல்லுாரை தலைமை இடமாக கொண்ட புதிய தாலுகா உருவாக்கப்படும்,'' என அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் வாக்குறுதி அளித்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். கிராமங்களில், ஆனந்தனுக்கு பெண்கள், ஆரத்தி எடுத்தும், மலர்களை துாவியும் வரவேற்பு அளிக்கின்றனர். வேட்பாளருடன், எம்.எல்.ஏ. விஜயகுமார் மற்றும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுடன், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

நேற்று கோல்டன் நகர் பகுதி பிரசாரத்தில் வேட்பாளர் ஆனந்தன் பேசியதாவது:

மக்கள் தொகை அதிகரித்து வந்த காரணத்தினால், கடந்த 2014ம் ஆண்டில், திருப்பூர் தாலுகா என்பது, திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என பிரிக்கப்பட்டது. தற்போதும், திருப்பூர் வடக்கு தொகுதியில் மக்கள் தொகை அதிகம். பெருமாநல்லுார் பிர்காவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள் இன்னும் அவிநாசி தாலுகாவில் உள்ளன. ஊத்துக்குளி தாலுகாவிலும், அதிக கிராமங்கள் உள்ளன. எனவே, பெருமாநல்லுாரை தலைமை இடமாகக் கொண்ட புதிய தாலுகா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பெருமாநல்லுாரில் விசாலமான இடத்தில் கட்டப்படும். பெருமாநல்லுார் பகுதியில், கலை, அறிவியல் கல்லுாரி துவங்கப்படும். நான்காவது குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்தி, தினமும் சுவையான மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக, ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, வேட்பாளர் ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement