கேரளாவில் 79.63 சதவீத ஓட்டுப்பதிவு: தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1

திருவனந்தபுரம் : “கேரளாவில் தபால் ஓட்டுகள் உட்பட மொத்தம் 79.63 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.” என, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 9ம் தேதி தேர்தல் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த தேர்தலில், மொத்தம் 2.12 கோடி பேர் ஓட்டளித்தனர்.

இதனால், 78.27 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்ததாக தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் தெரிவித்திருந்தது. இருப்பினும், ஓட்டுப்பதிவு குறித்த முழு விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

ஓட்டுச்சாவடி மையங்களில் பதிவான ஓட்டுகள், தபால் ஓட்டுகள் உள்ளிட்ட விபரங்களை வெளியிடாமல் தேர்தல் கமிஷன் காலம் தாழ்த்துவதாக அக்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் விபரங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் நேற்று வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள், தபால் ஓட்டுகள், நேரடியாக வந்து ஓட்டளிக்க முடியாதவர்களிடம் இருந்து வீடுதோறும் பெறப்பட்ட ஓட்டுகள் என, அனைத்தும் கணக்கிடப்பட்டன. இதன்படி, மாநிலம் முழுதும் 79.63 சதவீதம் ஓட்டுப் பதிவாகியுள்ளது.

இது, தற்காலிக எண்ணிக்கை மட்டுமே. ராணுவத்தினர் செலுத்திய 53,984 தபால் ஓட்டுகள் இன்னும் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னரே முழுமையான ஓட்டு சதவீதம் தெரியவரும்.

மாநிலம் முழுதும் அனைத்து தொகுதிகளிலும் 3.78 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. கடந்த மூன்று நாட்களாக இந்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. இருப்பினும், அசுர வேகத்தில் செயல்பட்டு, ஓட்டுப் பதிவு விபரங்களை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற் கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement