காதலனுடன் ஓடிய பெண் ஆணவக்கொலை சித்தப்பா உட்பட மூவர் கைது

பெலகாவி: கணவரை விட்டு விட்டு, காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே கொலை செய்து எரித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவின் ஹனபரட்டி கிராமத்தில் வசித்தவர் சத்யவ்வா, 24. இவர், இதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா பாட்டீல், 28, என்பவரை காதலித்தார். இதையறிந்த பெற்றோர், மகளின் காதலை கண்டித்து, வேறு இளைஞரை திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் கணவருடன் வாழ விரும்பாத சத்யவ்வா, காதலருடன் ஊரை விட்டு ஓடிவிட்டார். இதனால் தங்களின் குடும்ப மரியாதை பாழானது என, கோபமடைந்த குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.

யம்கன்மரடியில் காதலருடன், மகள் வசிப்பதை கண்டுபிடித்தனர். அவரை மார்ச் 13ம் தேதி, மஹாராஷ்டிராவின், மீரஜ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு அழைத்து சென்று, அரிவாளால் வெட்டி கொலை செய்து, உடலை எரித்துவிட்டு தலைமறைவாயினர்.

சத்யவ்வாவை காணாமல் தேடி வந்த காதலர், யம்கன்மரடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில், சத்யவ்வாவின் குடும்பத்தினரை விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கொலை தொடர்பாக, இவரது சகோதரர் ஷானூரா ஹளவரா, சித்தப்பா பிரகாஷ் ஹளவரா, மாமா கல்லப்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement