இதே நாளில் அன்று

ஏப்ரல் 15: மயிலாடுதுறை மாவட்டம், நடுத்திட்டு கிராமத்தில், சீனிவாசம் பிள்ளை -- சொர்ணத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1925, ஜூலை 11ல் பிறந்தவர், அரங்கநாதன் எனும் குன்றக்குடி அடிகளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் பள்ளி படிப்பையும், தருமபுரம் மடத்தில் தமிழில் வித்வான் பட்டமும் பெற்றார். தன் 17வது வயதில், தருமபுரம் ஆதீனத்தில், 'கந்தசாமி பரதேசி' என்ற பெயரில் துறவியானார்.

கடந்த 1949ல் குன்றக்குடி மடத்தின் இளைய ஆதீனமான இவர், 1952ல், 'தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' என்ற பெயருடன், குன்றக்குடி மடத்தின், 45வது ஆதீனமாக பொறுப்பேற்றார்.

பல வழிகளிலும் குன்றக்குடியை முன்னேற்றினார். சமூக, சமய ஒற்றுமைக்காக பாத யாத்திரை சென்ற இவர், தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்க தலைவர், சட்ட மேலவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர் பொறுப்புகளையும் வகித்தார்.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்டவற்றை பெற்ற இவர், தன் 69வது வயதில், 1995ல் இதே நாளில் சித்தி அடைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement