61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம்... துவங்கியது! கடற்கரையில் ஓய்வெடுக்குது படகுகள்
சென்னை: கடல் உயிரிகளின் இன விருத்தியை கருத்தில் கொண்டு மத்திய அரசு விதித்துள்ள 61 நாள் மீன்பிடி தடைக்காலம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் அதிகாலை அமலுக்கு வந்தது. இதனால், சென்னை காசிமேடில் ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் ஓய்வெடுக்கின்றன. கட்டுமரம், சிறு பைபர் படகுகளின் மீன்பிடி தொழில் நடக்கும் என்றாலும், குறைந்த அளவே மீன் கிடைக்கும் என்பதால், விலை பல மடங்கும் உயர வாய்ப்புள்ளது. தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில், நேற்று 14 நள்ளிரவு முதல் ஜூன் 14 வரையிலான 61 நாட்கள், மீன் இனப்பெருக்க காலமாக உள்ளது. இந்த காலத்தில், மீன் பிடித்தால், கடலில் மீன் வளம் பாதிக்கும் என்பதால், தமிழக கடல் மீன்பிடி சட்டத்தின்படி, மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள, 14 கடலோர மாவட்டங்களில், 20,000த்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பயன்படுத்தி மீன்பிடிக்க செல்லாமல், கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 1,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி கிடக்கிறது.
கோரிக்கை இந்த தடைக்காலத்தில், மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை புதுப்பித்தல், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
அதேநேரம், சிறு பைபர் படகுகள், கட்டுமரம் வாயிலாக மீன்பிடிக்க தடையில்லை. இவற்றின் வாயிலாக ஆழ்கடலுக்கு செல்லாமல், கடலோரத்தில் மட்டும் மீன்பிடிக்க, மீனவர்களுக்கு அனுமதி உள்ளது.
இதன் வாயிலாக, குறைந்த அளவிலான சிறிய வகை மீன் வகைகள் மட்டுமே கிடைக்கும். இவை சென்னை மக்களின் தேவையில், 10ல் ஒரு பங்கு கூட இருக்காது என்பதால், மீன், இறால், நண்டு உள்ளிட்டவற்றின் விலை இருமடங்கு உயர வாய்ப்புள்ளது.
விதவிதமான மீன்களை ருசிப்பதை, அசைவ பிரியர்கள் கொஞ்சம் தங்களை சமாதானப்படுத்திக் கொள்வதுதான் நல்லது.
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு தடைக்கால நிவாரணமாக குடும்பத்திற்கு, 8,000 ரூபாய் வழங்கி வருகிறது. இதை, 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், தடைக்கால நிவாரணம், 12,000 ரூபாயாக வழங்கப்படும் என, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளன. விஜய் கட்சியோ, 20,000 ரூபாய் வழங்கப்படும் என, ஆசைகாட்டியுள்ளது.
எச்சரிக்கை கடந்த 2001ல் மீன்பிடித் தடைக்கால சட்டம் கொண்டுவரப்பட்டது. மொத்தம், 45 நாட்களாக இருந்த தடைக்காலம், 2017ம் ஆண்டு முதல், 61 நாட்களாக மாற்றப்பட்டது.
தடை காலத்தில், அரசின் உத்தரவை மீறி, விசைப்படகுகள் வாயிலாக மீன்பிடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
@block_B@ தடைக்காலத்தை மாற்ற மத்திய அரசு பரிசீலனை 'மீன்பிடித் தடைக்காலம் சரியாக கணக்கிடப்படவில்லை; தடைக்காலத்தை அக்., - நவ., மாதங்களில் அமல்படுத்த வேண்டும்' என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மீனவர்களின் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மீன்களின் இனப்பெருக்கம் காலம் குறித்து, மத்திய மீன்வளத்துறை சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிகளின் முடிவின் அடிப்படையில், மத்திய அரசு முடிவு செய்யும்' என்றனர்.block_B
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்