தேர்தல் விழிப்புணர்வு: வினாடி - வினா போட்டி
திருவள்ளூர்: நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு தேர்தல் விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறை வாக்களர்களான கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் இளம் தலைமுறையான பள்ளி மாணவ - மாணவியருக்கு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
'மீம்ஸ், ரீல்ஸ்' உருவாக்குதல், விழிப்புணர்வு வாசகம், கட்டுரை எழுதுதல் மற்றும் பதாகை, சுவரொட்டி வரைதல் ஆகிய போட்டிகள், இணையவழி பதிவேற்றம் மூலம் நடத்தப்பட்டது. மொத்தம் 3,525 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான தேர்தல் விழிப்புணர்வு முதல்நிலை வினாடி - வினா போட்டி, கடந்த 8ம் தேதி இணைய வழியில் நடைபெற்றது. அதில், 4,203 பேர் பங்கேற்றனர். முதல் 11 இடங்கள் பிடித்த மாணவ - மாணவியருக்கு, இறுதிச்சுற்று வினாடி - வினா போட்டி, முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. அதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் அப்துல் ராசிக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.