தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்

ஆர்.ஆர்.நகர்: உடல் நிலை பாதிக்கப்பட்ட தாயை, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரின், பி.இ.எம்.எல்., லே - அவுட்டில் வசித்தவர் சாவித்ரம்மா, 72. வாடகை வீட்டின் இரண்டாவது மாடியில் தன் மகன் வெங்கடேஷ், 40, மற்றும் மருமகளுடன் வசித்தார். வெங்கடேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில், விற்பனை பிரதிநிதியாக பணியாற்றுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாவித்ரம்மாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், உடலுறுப்புகள் செயல் இழந்தன.

அவரால் நடக்கவும் முடியவில்லை. இவருக்கு மகன் பணிவிடை செய்ய வேண்டி யிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை, தாயை நான்காவது மாடிக்கு துாக்கி சென்ற வெங்கடேஷ், அங்கிருந்து கீழே தள்ளினார்.

இதில் பலத்த காயமடைந்த சாவித்ரம்மா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, வீட்டு உரிமையாளர் விக்ரம், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டனர். அவரது மகன் வெங்கடேஷை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது, 'ஐந்து ஆண்டாக என் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். தினமும் வலியை அனுபவித்தார்.

'நான் தினமும் பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது, அவர் வலியால் துடிப்பதை காண்பேன். அவர் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அது மட்டுமின்றி அவருக்கு பணிவிடை செய்து, பார்த்து கொள்ள முடியவில்லை. எனவே தாயை மாடியில் இருந்து வீசி கொலை செய்தேன்' என கூறியுள்ளார்.

உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

Advertisement