நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?

பெங்களூரு: முதல்வரின் அரசியல் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நசீர் அகமதுவை, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், முதல்வரின் அரசியல் செயலர் பதவியில் இருந்து, அவர் நீக்கப்பட்டார்.

இவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் ஒதுக்கிய நிலையில், அமைச்சர் ஜமீர் அகமது கான், நேற்று காலை ஜெயமஹால் அருகில் உள்ள நசீர் அகமதுவின் இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்து பேசினார்.

இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். மாநிலத்தில் நடக்கும் சதிகள் குறித்து, டில்லிக்கு சென்று மேலிடத்திடம் புகார் அளிக்கும்படி, நசீர் அகமதுவுக்கு, ஜமீர் ஆலோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு ஜூனில், நசீர் அகமதுவின் எம்.எல்.சி., பதவி காலம் முடிவடைகிறது. அடுத்த முறையும் தானே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, அவர் முயற்சித்தார்.

ஆனால் தாவணகெரே இடைத்தேர்தல், அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை, சிறுபான்மையினருக்கு அதிகமான வாய்ப்பு அளிப்பது, காங்கிரஸ் மட்டுமே. கட்டாயத்தின்படி அவர் காங்கிரசிலேயே இருக்க வேண்டியுள்ளது. பா.ஜ.,வில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு குறைவு.

இதற்கு முன் ம.ஜ.த.,வில் சிறுபான்மையினருக்கு, அதிகமான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாகியுள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நசீர் அகமது நெருக்கடியில் சிக்கியு ள்ளார்.

இவருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ஜமீர் அகமது கான், 'காங்கிரசில் நாளுக்கு நாள் மூச்சு முட்டும் சூழ்நிலை உருவாகிறது.

'வரும் நாட்களில் நான் ம.ஜ.த.,வுக்கு திரும்ப ஆலோசிக்கிறேன். காங்கிரசில் நடக்கும் நிலவரங்க ளை கவனித்து, முடிவு செய்வேன். நீங்களும் ம.ஜ.த.,வுக்கு செல்லுங்கள்' என நசீர் அகமதுவுக்கு ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது.

Advertisement