நாய் குறுக்கே வந்ததால் விபத்து 11 மாத ஆண் குழந்தை பலி


கோபி : கோபி அருகே நாய் குறுக்கே வந்ததால், பைக் விபத்துக்குள்ளானதில், 11 மாத ஆண் குழந்தை இறந்தது.

கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 38. தனியார் மில்லில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். அவருக்கு காஞ்சனா, 32, என்ற மனைவி, விகாஷ் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, ராமசாமி தனது குடும்பத்துடன், கோபி அருகே கூடக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் நேற்று காலை, 10:00 மணிக்கு சாமி தரிசனம் செய்தனர். பின் மூவரும் பேஷன் புரோ என்ற பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ராமசாமி பைக்கை ஓட்டியும், பின்னால் அவரது மனைவியும், இருவருக்கும் நடுவே குழந்தையும் பயணித்தனர். சுட்டிக்கல்மேடு என்ற இடத்தில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால், திடீரென பிரேக் போட்டதால், நிலைதடுமாறி பைக் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. அந்த விபத்தில் தம்பதிக்கு ஏதும் காயம் ஏற்படவில்லை. ஆனால் குழந்தை விகாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதித்த போது, வரும் வழியிலேயே விகாஷ் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement