விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:-மதுரை மேலவெளி வீதியிலுள்ள விக்டோரியா எட்வர்டு மன்ற நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 6 மாதங்கள் அவகாசம் அளித்தது.

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்ற நிர்வாக முறைகேடு தொடர்பாக, தமிழக அரசுக்கு புகார் அனுப்பப்பட்டது. சங்க நிர்வாகம் கலைக்கப்பட்டு தனி அலுவலரிடம் 2023 மார்ச் 1 ல் நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்த பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார். அதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தனி நீதிபதி,'விசாரணை ஏற்கனவே துவங்கிவிட்டது. அதை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். அதை எதிர்த்து இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் மேல்முறையீடு செய்தனர்.ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு, ‛தனி அலுவலர் பதவிக்காலம் பிப்.,28ல் முடிவடைந்தது. அவரை மேலும் 3 ஆண்டுகளுக்கு நியமிக்க சட்டத்தில் வழிவகை இல்லை. உறுப்பினர் பட்டியலை சரிபார்ப்பதில் தாமதம் காரணமாக, சங்க தேர்தலை நடத்த முடியவில்லை,' என தெரிவித்தது.

இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.செல்வம் நிர்வாகியாக செயல்பட வேண்டும். ஆவணங்கள், உறுப்பினர்கள் வழங்கிய விபரங்களை ஆய்வு செய்த பின், உறுப்பினர் பட்டியலை இறுதி செய்யும் பணியை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். பின் பொதுக்குழு கூட்டம் நடத்தி, தேர்தல் அட்டவணை வெளியிட வேண்டும். தேர்தல் மூலம் புது நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். நிதி முறைகேடு தொடர்பாக நீதிபதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

இதை நிறைவேற்ற கால அவகாசம் கோரி நிர்வாகியான நீதிபதி ஏ.செல்வம் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பி.பி.பாலாஜி அமர்வு 6 மாதங்கள் அவகாசம் அளித்தது.

Advertisement