சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 61 ஆண்டு சிறை

சிவகங்கை:சிவகங்கையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜூ 68. இவர் 2021ஆம் ஆண்டு தன்னுடைய பேத்தி உறவு முறையான 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். சில தினங்களில் சிறுமி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். சிறுமியை அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைகள் நலக்குழுவினருக்கு தெரியப்படுத்தினர். குழந்தைகள் நலக்குழுவினர் சிறுமியிடம் விசாரித்ததில் அவரது தாத்தா ராஜூ சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ராஜூவை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல்முருகன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட ராஜூவிற்கு சிறுமியை மிரட்டிய குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பேத்தி உறவு முறையிலான சிறுமியுடன் தகாத உறவு வைத்த குற்றத்திற்கு 20 ஆண்டு சிறையும், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 61 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement