தோனி 'அட்வைஸ்' * ரவுண்ட் அப்
சென்னை: சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர் நுார் அகமது 21. நடப்பு தொடரில் முதல் 4 போட்டியில் 1 விக்கெட் மட்டும் வீழ்த்தினார். கொல்கட்டா போட்டியில் அசத்திய இவர், ரகானே, ரிங்கு சிங், கிரீன் என மூன்று முக்கிய வீரர்களை வீழ்த்தி, சென்னை வெற்றிக்கு கைகொடுத்தார்.
சென்னை அணி உதவி பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறுகையில்,'' போட்டிக்கு முதல் நாள், பயிற்சியின் போது, தோனியிடம் நீண்ட நேரம் பேசினார் நுார் அகமது. அப்போது 'லெக் பிரேக்' முறையில் அதிகளவு பந்துவீசுமாறு தோனி 'அட்வைஸ்' செய்தார். இது நுார் அகமதுவுக்கு கைகொடுத்துள்ளது,'' என்றார்.
அம்பயர்களுக்கு அபராதம்
புதுடில்லி: கிரிக்கெட் லீக் தொடரில் இதுவரை 23 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 6 போட்டிகள் நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் நேரம் நடந்தன. மும்பை, பெங்களூரு மோதிய போட்டி 4 மணி நேரம், 22 நிமிடம் நடந்தன.
இதுகுறித்து மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் தலைவர் பிராசர் ஸ்டீவர்ட் கூறியது: போட்டிகள் தாமதம் ஆக அம்பயர்கள் தான் காரணம். இவர்கள் தான் சரியான நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு இடைவேளையிலும் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது. ஏன் தாமதம் என இப்போது புரிந்து இருக்கும். தாமதம் செய்தால் 5 'பெனால்டி' ரன் வழங்கலாம். அம்பயர்கள் இதைச் செய்ய தயங்குகின்றனர். சரியான நேரத்தில் போட்டி முடியவில்லை என்றால், அம்பயர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரகானேவுக்கு மாற்று யாரு
கொல்கட்டா: கொல்கட்டா அணி இதுவரை 5 போட்டியில் பங்கேற்ற போதும் இன்னும் வெற்றிக்கணக்கை துவக்கவில்லை (4 தோல்வி, 1 ரத்து). கேப்டன் ரகானே 39, பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், தற்போது வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே என இளம் வீரர்கள் மின்னல் வேக ரன்குவிப்பை தருகின்றனர். மாறாக ரகானே, 5 போட்டியில் 7 சிக்சர், 8 பவுண்டரி மட்டும் அடித்துள்ளார். பேட்டிங் சராசரியும் 150 க்கும் குறைவாக உள்ளது.
ரகானேவை மாற்றலாம் என்றால், துணைக் கேப்டன் ரிங்கு சிங்கும் மோசமான 'பார்மில்' உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 37 'டி-20'ல், 3 ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்த ராவ்மென் பாவெல் மட்டும் அனுபவ வீரராக உள்ளார். ஆனால் இவரது வெற்றி சதவீதம் குறைவாக (51%) உள்ளது.
மகிழ்ச்சியில் வாஷிங்டன்
புதுடில்லி: இந்திய அணி சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். கடந்த 2017 முதல் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்கிறார். புனே (2017), பெங்களூரு (2018-21), ஐதராபாத்தை (2022-24) தொடர்ந்து, 2025 முதல் குஜராத் அணிக்காக விளையாடுகிறார். இதில் இரு முறை மட்டும் (2017, 2020) ஒரு சீசனில் 10 போட்டிக்கும் அதிகமாக விளையாடினார்.
கடந்த முறை 6 போட்டியில் மட்டும் பங்கேற்றார். இம்முறை முதல் 4 போட்டியிலும் களமிறங்கிய வாஷிங்டன், நடப்பு சீசன் முழுவதும் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதுகுறித்து வாஷிங்டன் கூறுகையில்,'' லீக் போன்ற தொடர்களில், விளையாட வாய்ப்பு கிடைப்பதே மகிழ்ச்சி. குஜராத் அணியில் எனக்கான பணி என்ன என்பது குறித்து தெளிவாக உள்ளேன். ஏற்கனவே உள்ளது போல எங்களது சிறப்பான ஆட்டம் தொடரும்,'' என்றார்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்