மல்லல் அருகே பொன்னலியில் டிரான்ஸ்பார்மர் பழுதால் தவிப்பு   

சிவகங்கை:சிவகங்கை அருகே மல்லல் ஊராட்சியில் 10 நாட்களுக்கும் மேலாக மின் டிரான்ஸ்பார்மர் பழுதானதால், மின்வசதியின்றி குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மல்லல் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னலி கிராமத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கென ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை தொட்டி மூலம் வீடு தோறும் இணைப்பு பெற்றவர்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர்.

இது தவிர கிராமத்தில் குடிநீர் தொட்டி மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது தவிர மின் மோட்டார் மூலம் சில விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இந்நிலையில் ஏப்., 6ம் தேதி பொன்னலி கிராமத்தில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் பழுதானது. அந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி புதிதாக பொருத்த மின்வாரியம் முன்வரவில்லை. இதனால் இக்கிராம மக்களுக்கு மின் வினியோகமின்றி இருளில் தவிக்கின்றனர். மின்மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர் கிடைக்காமல் மக்கள், 3 கி.மீ., துாரமுள்ள சாத்தரசன்கோட்டைக்கு நடந்து சென்று எடுத்து வருகின்றனர். இது குறித்து மறவமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும், புதிய மின் டிரான்ஸ்பார்மர் பொருத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொன்னலி கிராம மக்கள் மின்விளக்கு வெளிச்சம், குடிநீரின்றி தவித்து வருகின்றனர். ///

Advertisement