ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!  

கோவை: கோவை மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்கள், நேற்று தபால் ஓட்டு பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில், 17,102 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களில், 12,019 பேர் தபால் ஓட்டு போட படிவம் 12 பூர்த்தி செய்து கொடுத்தனர். வெளிமாவட்டங்களில் வாக்காளர்களாக உள்ள 1,691 அரசு அலுவலர்கள், இங்கு தேர்தல் பணியாற்றுகின்றனர். இவர்களும் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பப்பட்டு, படிவம் வழங்கினர்.

2ம் கட்ட பயிற்சி வகுப்பு அந்தந்த சட்டசபை தொகுதிகளில் நடந்தபோது, தபால் ஓட்டு போடுவதற்கான மையம் அமைக்கப்பட்டது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி சாவடி, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டன.

வாக்காளர் பட்டியலை சரிபார்த்த பின், ஓட்டளிக்க தேர்தல் அலுவலர்கள் அனுமதித்தனர். தபால் ஓட்டு போடும் முன், அவர்களது விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. தபால் ஓட்டு பதிவதை தி.மு.க. - அ.தி.மு.க.வினர் கண்காணித்தனர்.

இன்று பயிற்சிக்கு வராதவர்களுக்கு, 19ம் தேதி (ஞாயிறு) மறுபயிற்சி நடைபெறும். தபால் ஓட்டு போட தவறியவர்கள், வேறு மாவட்ட வாக்காளர்களாக உள்ள தேர்தல் பணி அலுவலர்கள், பிற தேர்தல் பணி அலுவலர்கள், அன்றைய தினம் ஓட்டளிக்கலாம்.

வேறு மாவட்டங்களை சேர்ந்த வாக்காளர்களான அரசு அலுவலர்கள் போடும் தபால் ஓட்டுகள், திருச்சியில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அந்த ஓட்டுகள் அங்கு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழங்கப்படும்.

கோவையில் பதிவான மற்ற மாவட்டங்களின் தபால் ஓட்டுகள் கொண்டு செல்லப்படும். அங்கு வந்திருக்கும் கோவை மாவட்ட தொகுதிகளுக்கான தபால் ஓட்டுகளை பெற்று, பாதுகாப்பாக எடுத்து வரப்படும்.

இதற்கு முன், போஸ்ட் ஆபீஸ் மூலமாக தபால் ஓட்டுகளை அனுப்பும் வசதி இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டரின் அறைக்கு முன் சீலிடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, ஓட்டு எண்ணிக்கையை துவக்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் அந்த பெட்டி எடுத்து வரப்படும். அதுவரை தபால் ஓட்டு போட வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நடைமுறை இத்தேர்தலில் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பணி போலீசார்

நாளை ஓட்டு போடலாம்

தேர்தல் பணியில் ஈடுபட உளள போலீசாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. தபால் ஓட்டு செலுத்த, அந்தந்த சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது. நாளை (17ம் தேதி) முதல் 19 வரை 3 நாட்கள் மட்டும் தபால் ஓட்டு போட முடியும். இதேபோல், அத்தியாவசிய சேவை பட்டியலில் இடம் பெற்றுள்ள தெற்கு ரயில்வே, அகில இந்திய வானொலி, இந்திய விமான நிலைய ஆணையம், தொலைத்தொடர்பு துறை, ஊடகவியலாளர்கள், அரசு போக்குவரத்து கழகம், தமிழக மின் வாரியம், தீயணைப்பு துறை, மத்திய சிறை மற்றும் போக்குவரத்து காவலர்களில், 628 பேரிடம் 12டி படிவம் பெறப்பட்டு உள்ளது. இவர்களும் நாளை முதல் 19 வரை காலை 9 முதல் மாலை 5 வரை தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தபால் ஓட்டு அளிக்கலாம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள், தேர்தல் நாளன்று பணிபுரிய இருக்கும் பணி உத்தரவு ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். 12டி படிவம் கொடுத்தவர்கள், ஏப். 23ல் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க முடியாது என, மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமார் தெரிவித்துள்ளார்.

@block_B@

மொபைல் போனுக்கு தடை

தேர்தல் ஆணைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப, ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. அருகில் உள்ள அறையில் மொபைல் போன் டெபாசிட் சென்டர் அமைக்கப்பட்டிருந்தது. சிலரே மொபைல் போனை 'ஆப்' செய்து கொடுத்தனர்; அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது; பலரும் ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு சென்றனர். தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. block_B

Advertisement