எட்டாம் கட்ட போராட்டம் தோல்வி; தேர்தலில் தி.மு.க.,வுக்கு பாடம்: தொழில்முனைவோர் கூட்டமைப்பு அறிவிப்பு

1

திருப்பூர்: மின்கட்டண உயர்வுக்கு எதிரான எட்டு கட்ட போராட்டங்களில் தோல்வி ஏற்பட்டதால், சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு பாடம் புகட்ட இருப்பதாக, தமிழ்நாடு தொழில்முனைவோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது: தமிழக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதால், 2023 - 24ம் ஆண்டில், கடும் அதிருப்தி அலை உருவானது. அபரிமிதமான மின்கட்டண உயர்வு, குறு, சிறு தொழில்களை புரட்டிப்போட்டது.

மாநிலம் முழுதும் உள்ள, 500க்கும் அதிகமான தொழில் அமைப்பினர் ஒருங்கிணைந்து, தமிழ்நாடு தொழில்முனைவோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர் போராட்டம் நடத்தினோம்.

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் என, எட்டு கட்ட போராட்டம் நடத்தியும், தமிழக அரசு இறங்கி வரவில்லை. அடுத்ததாக, அபரிமிதமான சொத்துவரி உயர்வு காரணமாக, கட்டட வாடகை உயர்ந்தது. கடை வியாபாரிகள், குறு, சிறு உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர் அதிலும் பாதிக்கப்பட்டனர்.

வாடகை, மின் கட்டண உயர்வுகளால், ஒவ்வொரு தொழிலும் உற்பத்தி செலவு அதிகரித்தது. இதனால், குறுந்தொழில்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு காரணமாக, உற்பத்தி செலவு அதிகரித்தது. சோலார் மின்சார பயன்பாட்டிலும், புதிய கட்டுப்பாடு விதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எட்டு கட்டமாக போராடியும், கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை; சந்திக்க நேரம் கூட ஒதுக்கவில்லை.

குறு, சிறு நிறுவனங்கள் முடங்கியதால், அது பெரிய நிறுவனங்களுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. இதன் காரணமாக, குறு நிறுவனங்களும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒன்பதாவது கட்டமாக, சட்டசபை தேர்தலில் ஒருவிரல் புரட்சி நடத்தி, தி.மு.க.,விற்கு பாடம் புகட்ட திட்டமிட்டு, மாநிலம் முழுதும் ஒருங்கிணைத்து வருகிறோம். தமிழகம் முழுதும், சட்டசபை தேர்தலில் எங்கள் போராட்டம் பிரதிபலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement