பாகிஸ்தான் ரூ.28,000 கோடி கடன் சவுதி அரேபியா உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, சவுதி அரேபியா கூடுதலாக 28,000 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகளிடமும், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கடன் பெற்றுள்ளது.

தற்போது பாகிஸ்தானுக்கு, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஏற்கனவே உறுதியளித்த 42,000 கோடி ரூபாயுடன், கூடுதலாக 28,000 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.

இதனை பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசேப், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த செப்டம்பரில் இரு நாடுகளும் முக்கியமான ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போர் விமானங்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி பாதுகாப்பு உதவி செய்கிறது. அதற்கு பதிலாக சவுதி அரேபியா பொருளாதார உதவி அளிக்கிறது.

Advertisement