70 சதவீத சிலிண்டரை முறையாக வழங்க ஹோட்டல் உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சென்னை: 'ஹோட்டல்களுக்கு, 70 சதவீத சமையல் காஸ் சிலிண்டரை, முறையாக வினியோகம் செய்தாலே போதும்' என, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை, ஏஜன்சிகள் வாயிலாக விற்கின்றன.

கடந்த மாதம், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றத்தால், நம் நாட்டிற்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டது.

இதனால், வீடுகளுக்கு சிலிண்டர் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க, அம்மாதம், 9ம் தேதி முதல் ஹோட்டல், வணிக பிரிவுகளுக்கு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில், வணிக சிலிண்டர் ஒதுக்கீடு, 20 சதவீதம், 50 சதவீதம் என, உயர்த்தப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் வணிக சிலிண்டர் ஒதுக்கீடு, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உடன் நேற்று பேச்சு நடத்தினர்.

இது குறித்து, சென்னை ஹோட்டல் சங்க தலைவர் ரவி கூறியதாவது:

வணிக சமையல் காஸ் சிலிண்டர் ஒதுக்கீட்டை, 70 சதவீதமாக உயர்த்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், 100 சிலிண்டர் வாங்கியிருந்தால், இந்த ஆண்டில், 70 வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை, எவ்வித பிரச்னையும் இல்லாமல், சரியாக கொடுத்தாலே போதும் என, தெரிவிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை வாங்கக் கூடாது என்றும், அப்படியே யாராவது விற்றால், அவர்களின் விபரங்களை தெரிவிக்கும்படியும், அதிகாரிகள் கூறினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement