தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

சென்னை: 'தமிழகத்தில் ஏப்.,19 வரை வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்கிழக்கு மத்தியப்பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரையிலான பகுதியின், மேல் வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ராமநாத புரம் ஆகிய இடங்களில், இன்று முதல் ஏப்., 21 வரை, லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், ஏப்., 19 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த நாட்களில், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், பொது மக்களுக்கு அசவுகரியம் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement