அந்தமான் கடலில் படகு கவிழ்ந்தது 250 பேரை ஒரு வாரமாக தேடும் மீட்புக்குழு

டாக்கா, அந்தமான் கடலில், ரோஹிங்கியா அகதிகளுடன் பயணித்த மீன்பிடி படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்பட்டோரை தேடும் பணி ஒரு வாரமாக நடந்து வருகிறது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தென்பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் நகரின் டெக்னாப் என்ற இடத்திலிருந்து, மீன்பிடி படகு மூலம் ரோஹிங்கியா அகதிகள் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 250க்கும் மேற்பட்டோர் மலேஷியாவிற்கு செல்ல முயன்றுள்ளனர்.

கடந்த வாரம் புறப்பட்ட இந்த படகு, அந்தமான் அருகே நடுக் கடலில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதனால், அதில் பயணித்தோர், கடலில் மிதந்து தவித்துள்ளனர். வங்கதேச கடற்படை வீரர்கள் கடந்த 9-ம் தேதி, ஒன்பது பேரை மீட்டுள்ளனர். ஆனால், 250க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.

தற்போது, அந்தமான் கடலில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், கடல் நிலைமை மோசமாக இருப்பதால், மீட்பு பணிகள் சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடலில் கடும் காற்றுடன் கொந்தளிப்பான அலைகள் எழுந்ததாலும், அதிகப்படியான பயணியர் ஏற்றப்பட்டதாலும் படகு மூழ்கியதாக ஐ.நா., அகதிகள் அமைப்பு மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளன.

அந்த அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த படகு பயணம், ரோஹிங்யா அகதிகளின் தொடர்ச்சியான துயரத்தை பிரதிபலிக்கிறது.

' மியான்மரில் இருந்து தப்பி, வங்கதேச முகாம் களில் தங்கியுள்ள ரோஹிங் கியா அகதிகள் சிறந்த வாழ்க்கையை தேடி, ஆபத் தான கடல் பயணத்தை மேற் கொள்கின்றனர். அவர்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது .

Advertisement