சொத்து மதிப்பு அறிய புதிய வசதி அறிமுகம் செய்கிறது பதிவுத்துறை

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, 'ஸ்டார் - 3.0' என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட சில பத்திரங்களை, சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலே பதிவு செய்யலாம். சொத்துக்களின் பத்திர பிரதியை உடனடியாக பெறுவதற்கான வசதியும் வந்துள்ளது.

இந்நிலையில், சொத்து வாங்குவோர், அதற்கான வழிகாட்டி மதிப்பு விபரங்களை அறிவதில் சிரமம் உள்ளது. இதை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மஹாராஷ்டிராவில், சொத்துக்களின் அடிப்படை விபரங்களை அளித்தால், அதன் மதிப்பு விபரங்கள் அறிக்கையாக வழங்கப்படுகின்றன.

பதிவுத்துறை இணையதளத்தில் விண்ணப்பித்தால், இது தொடர்பான அறிக்கை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையை, தமிழக பதிவுத்துறையும் கடைபிடிக்க தயாராகி வருகிறது.

இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பதிவுத்துறை இணையதளத்தில், சொத்தின் வழிகாட்டி மதிப்பு விபரங்களை, பொது மக்கள் தேடி பார்த்து அறியும் நடைமுறை தற்போது உள்ளது.

சொத்து மதிப்பு விபரங்களை அறிக்கையாக பெறும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இது அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement